கொட்டித்தீர்த்த மழையால் வீடுகளுக்குள் நுழைந்த வெள்ளம்; மக்கள் அவதி
கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தின் உஸ்வட்டகெய்யாவ, குறிஞ்சிவத்தை போன்ற தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்கள் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புந்துள்ளதாக மக்கள் அவதியுற்று வருகின்றனர். வத்தளை பிரதேசத்தில் சுமார் 3,000 குடும்பங்களில் 8,000 ற்கும் மேற்பட்ட மக்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளதுடன் இதில் 2,100 மேற்பட்ட மாணவர்களும் அடங்குவர்.
தொடரும் மழை வீழ்ச்சி
தொடரும் மழை வீழ்ச்சி காரணமாக இப்பகுதிகளில் சுமார் 2 அடி தொடக்கம் 4 அடி வரையில் நீர்மட்டம் தேங்கியுள்ள நிலையில் வடிகால்கள் இல்லாமையால் இந்நீர் மட்டமானது உயரும் அபாயத்திலுள்ளது.
நிர்க்கதியாகியுள்ள மக்களில் சிலர் பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளதோடு, பலர் தஞ்சமடைய இடமில்லாது வெள்ள நீரில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில தொண்டு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் உணவுப் பொதிகள் மற்றும் உலர் உணவுகளையும் வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளில் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.