புரட்டாசி சனிக்கிழமையில் கடைப்பிடிக்க வேண்டிய தளிகை வழிபாடு!
பெருமாளுக்கு விஷேடமான புரட்டாசி மாத சனிக்கிழமையில் அவரை தளிகை போட்டு வழிபடுவதால் எமக்கு அதிகபடியான நன்மைகள் கிடைக்கப்பெறும். புரட்டாசி மாதத்திற்கு கன்னி மாதம் என்ற பெயரும் உண்டு. இந்த மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார்.
இந்த கன்னி ராசிக்கான அதிபதி புதபகவான். அத்தகைய புதபகவானுக்குரிய அதிபதி பெருமாள். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னேற புதனுடைய அனுகிரகம் தேவை. ஆகையால் தான் புரட்டாசியில் புதபகவான் அதிபதியான பெருமாளை தளிகை போட்டு வழிபாடு செய்கிறோம்.
புரட்டாசி சனிக்கிழமை தளிகை போடும் முறை புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் சனிக்கிழமைகளில் தளிகை போட்டு பெருமாளை வணங்குவது வழக்கம். இந்த தளிகையானது அவரவர் வழக்கத்துக்கு ஏற்றவாறு போடுவார்கள்.
இப்படி போடும் தளிகையில் இந்த ஒரு பொருளை வைத்து எளிய முறையில் வழங்கினாலே பெருமாளின் அருளை பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. புரட்டாசி தளிகையில் முக்கியமானது சர்க்கரை பொங்கலும் மாவிளக்கும் தான். இந்த தளிகை போடுவதற்கான பச்சரிசியில் தான் இந்த வழிபாட்டிற்குரிய சூட்சமமே அடங்கியுள்ளது.
இதற்கு நாம் ஒரு சொம்பை தயார் செய்து கொள்ள வேண்டும். அதில் முழுக்க மஞ்சள் தடவி நாமத்தை போட்டு சொம்பு முழுவதும் துளசியால் மாலை கட்ட வேண்டும். தளிகை போடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாகவே இந்த சொம்பை கொண்டு நம் அருகில் இருக்கும் வீடுகளுக்கு சென்று வாசலில் நின்று கோவிந்தா என்ற நாமத்தை எழுப்பி அரிசியை தானமாக பெற வேண்டும்.
இப்படி குறைந்தது மூன்று வீட்டிலாவது அரிசியை தானமாக பெற்று வந்து அந்த அரிசியை பூஜையறையில் சிறிது நேரம் வைத்து விடுங்கள். அதன் பிறகு அதில் தளிகை செய்து போட வேண்டும்.
அதே போல் மாவிளக்கு போட வேண்டும். இதிலும் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் கலந்து மா விளக்கு தயார் செய்ய வேண்டும். இத்துடன் பாகத்தையும் கரைத்துக் கொள்ளுங்கள். தளிகை போடும் போது வாழையிலை அல்லது வெற்றிலை இரண்டில் ஏதாவது ஒன்றை வைத்து இரண்டு மாவிளக்கு வைத்து அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி பக்கத்தில் பானகத்தை வைக்க வேண்டும்.
இந்த இரண்டு முக்கியமான நெய்வேத்தியத்தையும் தயார் செய்த பிறகு பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு துளசியால் மாலை அணிவித்து கொள்ளுங்கள். இதைத் தவிர்த்து உங்களுடைய வழக்கப்படி வழிபாட்டை தொடர்ந்து செய்யலாம்.
இதை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு நெய்வேத்தியத்தை செய்து படைத்தாலே பெருமாளின் அனுகிரகத்தை பெற முடியும்.அத்துடன் வழிபாட்டின் போது “ஓம் பாண்டுரங்கா போற்றி ஓம் ”என்ற இந்த நாமத்தை மூன்று முறை தொடர்ந்து சொல்லுங்கள்.
அதன் பிறகு சொல்லுவது உங்கள் விருப்பம். இந்த வழிபாடு செய்வதற்கு விரதம் இருந்து செய்வது மிகவும் நல்லது. முடியாதவர்கள் எளிமையான உணவை மேற்கொண்டு இருக்கலாம்.
வழிபாடு முடிந்த பிறகு தளிகை சாப்பாட்டை தானமாக பெற்று வந்த இல்லங்களுக்கு கொடுக்க வேண்டும். தளிகை வழிபாடு செய்பவர்கள் இப்படி எளிமையான முறையில் வழிபட்டு அவருடைய நாமத்தையும் சொல்லி பெருமாளின் அருளையும் ஆசியும் பெற்று வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்துடன் வாழுங்கள்.