தமிழர் பகுதியில் மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்து சேதம்
அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பிடித்து முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே பரவிய தீயினால் வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இருக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றிருந்த நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை ஆரம்பித்த போது வீட்டிலிருந்த இரு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டுக்குச் சென்றிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தீ பரவியதைத் தொடர்ந்து பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டில் இருந்த அனைத்து பொருட்கள் மற்றும் உபகரணங்களும் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.