பொலிஸாரால் தாக்கப்பட்டு முகாமையாளர் பலி ; 3 பொலிஸாருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை
பொலன்னறுவையில் 2004ஆம் ஆண்டு ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிசாருக்கு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி, ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
2004இல், பொலன்னறுவை மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த நான்கு பொலிசார், பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலைமையில், சட்டவிரோத மதுபானம் தேடி ஹோட்டல் ஒன்றில் சோதனை நடத்தினர்.
கடூழிய சிறைத்தண்டனை
இதன்போது ஹோட்டல் முகாமையாளருக்கும் பொலிசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பொலிசார் அவரைத் தாக்கியதில் முகாமையாளர் உயிரிழந்தார்.
இதையடுத்து, நான்கு பொலிசாரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணை பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, பொலிஸ் பரிசோதகர் நோயால் உயிரிழந்தார்.
எஞ்சிய மூன்று பொலிசாருக்கு 2025 ஜனவரியில் மீண்டும் பணி வழங்கப்பட்டு, அவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கும், மற்ற இருவர் வேறு மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கும் இடமாற்றப்பட்டனர்.
2025 செப்டம்பர் 12 அன்று, மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மூன்று பொலிசாரும் ஆஜராகினர்.
சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டு, ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின், மூவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.