ஹோர்முஸ் பதற்றம் எதிரொலி ; இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை உயருமா?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலைமை காரணமாக, உலகின் முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலைமை உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளில் மாற்றம் ஏற்பட்டால், அதன் தாக்கம் இலங்கையின் எரிபொருள் விலைகளிலும் பிரதிபலிக்கக்கூடும் என பொருளாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதனால், அண்மையில் அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலைக் குறைப்பு நீண்டகாலம் நீடிக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை உயர்வு தொடர்ந்தால், எதிர்கால விலைத் திருத்தங்களின் போது மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC), கடந்த ஜூன் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைத்திருந்தது.
அதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோலின் ஒரு லிட்டர் விலை 20 ரூபாயால் குறைக்கப்பட்டு 414 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
இருப்பினும், தற்போதைய சர்வதேச சூழ்நிலை காரணமாக அடுத்த கட்ட விலைத் திருத்தங்கள் எவ்வாறு அமையும் என்பது குறித்து கவனம் திரும்பியுள்ளது.
அதேவேளை, எரிபொருள் விலைகளில் மாற்றம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.