அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி; ஈரான் பெருமிதம்!
அமெரிக்காவுக்கு எதிரான போரில் தாங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) அனைத்துக் கப்பல் போக்குவரத்துக்காகவும் உடனடியாகத் திறக்க வேண்டும் என ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.
அதோடு ஈரானிய நாகரிகம் மீண்டும் மீள முடியாத அளவிற்கு அழிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

அமெரிக்காவை நிரந்தரத் தோல்விக்கும், இக்கட்டான நிலைக்கும் தள்ளியுள்ளது
இந்தக் காலக்கெடு இன்று அதிகாலை 5:30 மணியுடன் முடிவடைய இருந்தது. இந்த இக்கட்டான சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஈரானுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க ஜனாதிபதி டிரம்ப் சம்மதித்தார்.
தொடர்ந்து, ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும், இரண்டு வார கால இருதரப்பு போர் நிறுத்தத்தை மேற்கொள்வதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
"மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றினை எட்டுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவுகளைப் பெற்றுள்ளோம்," என டிரம்ப் இது குறித்துத் தெரிவித்தார்.
இருப்பினும், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்காவைத் தங்களது நிபந்தனைகளை ஏற்கக் கட்டாயப்படுத்தியதன் மூலம் ஈரான் வரலாற்று வெற்றியை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதோடு அமெரிக்கா நிர்ணயித்த காலக்கெடுவை ஈரான் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. எதிரியின் அச்சுறுத்தல்கள் முற்றாக அகற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
வரி நீக்கம் உள்ளிட்ட எங்களது 10 அம்சக் கோரிக்கைகளை அமெரிக்கா முழுமையாகச் செயல்படுத்தினால் மட்டுமே போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரும்," என்று பாதுகாப்பு கவுன்சில் மேலும் வலியுறுத்தியுள்ளது.
ஈரான் தேசத்திற்கு இந்த 'நற்செய்தியை' வழங்கியுள்ள பாதுகாப்பு கவுன்சில், அமெரிக்காவை நிரந்தரத் தோல்விக்கும், இக்கட்டான நிலைக்கும் தங்களது படைகள் தள்ளியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது