எதிர்க்கட்சி தலைவருக்காக சபதம் எடுத்துள்ள ஹிருணிக்கா!
கடந்த 2020-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ஹிருணிக்கா பிரேமசந்திர (Hirunika Premachandra ) தேல்வியடைந்தார்.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால், தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவால் நாடாளுமன்ற அரசியலை தற்காலிகமாக கைவிட வேண்டிய நிலைமை ஹிருணிக்காவுக்கு ஏற்பட்டது.
இதேவேளை அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொண்டார். கட்சியால் நடத்தப்படும் மகளீர் மாநாடு உள்ளிட்ட முக்கியமான சில நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்றுவந்தார்.
இதனால் ஹிருணிக்கா ராஜபக்ஷ தரப்புடன் இணையப் போகின்றார் என்றெல்லாம் கூட அரசியல் களத்தில் கதைகள் அடிபட்டன. ஆனாலும் ஹிருணிக்கா மௌனம் காத்தார். அவரின் மௌனத்தைக்கூட சிலர் தாவலுக்கான சமிக்ஞையாக சுட்டிக்காட்டிவந்தனர்.
இப்பினும், தற்போது தீவிர அரசியலில் தீயாக ஹிருணிக்கா இறங்கியுள்ளார் . ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தொகுதி அமைப்பாளர் பதவியை பொறுப்பேற்றுள்ள அவர், சஜித் (Sajith Premadesa) தலைமையில் அண்மையில் மாபெரும் எதிர்ப்புக் கூட்டமொன்றை நடத்திக்காட்டினார்.
தான் சஜித் அணியில்தான் பயணிப்பார் எனவும், சஜித்தை ஜனாதிபதியாக்க பாடுபடுவேன் எனவும் ஹிருணிக்கா சபதமெடுத்தார். இந்நிலையில் அரசியல் ரீதியிலான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
2023 இல் ராஜபக்ஷ ஆட்சி கவிழும் எனவும் அவர் ஆருடம் கூறியுள்ளார். கடுவலையை நிச்சயம் கைப்பற்றபோவதாகவும் அவர் சூளுரைத்துள்ளார். ஆக ஹிருணிக்காவின் அதிரடி அரசியல் ஆட்டத்தை இனிவரும் நாட்களில் காணலாம்.