இந்திய மீனவர்களின் அட்டகாசம் ; இலங்கை மீனவர்கள் கவலை
தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடித்ததாக உள்ளூர் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை (05) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அத்துமீறல் காரணமாக இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வலைகள் காணாமல் போயுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் தலைமன்னார் கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுவதாகக் கூறப்படும் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், தங்களது மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமன்னார் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.