SLS தரச்சான்று இல்லாத நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் பறிமுதல்
உந்துருளி ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், நுகர்வோர் விவகார அதிகார சபை நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சோதனைகளின்போது, SLS 517 தரச்சான்று இல்லாத 327க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் கீழ், 21 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட 84 சோதனைகளின்போது, தரநிலைக்கு இணங்காத 327க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டு, வழக்குப் பொருட்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

முறைப்பாடுகள்
கம்பஹா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் எஸ்.எல்.எஸ். முத்திரைகளைத் தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தலைக்கவசங்கள் மற்றும் சிறிய அளவிலான தலைக்கவசங்கள் மத்தியிலும் SLS தரச்சான்று முத்திரை இல்லாத தயாரிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
இத்தகைய தலைக்கவசங்கள் உந்துருளிகள் அல்லது ஏனைய வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கான பாதுகாப்புத் தலைக்கவசங்களாக விற்பனை செய்யப்படுமாயின், அவையும் SLS 517 தரநிலைக்கு அமைவாகப் பரிசோதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.