காதலியுடன் கரம் பிடித்த சில மணி நேரத்தில் காதலனுக்கு மரண தண்டனை ; கண்ணீர் மூழ்கிய சிறை
ஈரானில், ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது காதலியுடன் தொலைபேசியில் திருமணம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவே முடியாது என்பது நன்கு அறிந்த காதலர்கள் சிறைச்சாலை தொலைபேசி வாயிலாக திருமண உறுதிமொழி எடுத்துக் கொண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

மரண தண்டனை
திருமணம் முடிந்ததும், இளைஞர் நேராக மரண தண்டனை நிறைவேற்றும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு மரண தண்டனை நிறைவேற்ற்பபட்டது.
அலிரேஜா செபாஹி (25), மஹ்சத் கேஷானி (22) இருவரும் காதலர்கள், அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது 2026ஆம் ஆண்டு துவக்கத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் செபாஹிக்கு மரண தண்டனையும் கேஷானிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவலும் பிறப்பிக்கப்பட்டது.
விரைவில் செபாஹிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் கேஷானி, சிறையிலேயே திருமணம் செய்ய அனுமதி கோரியிருந்தார்.
அதிகாரிகள் அனுமதியளித்ததன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை இருவரது தந்தையும் உடன் இருக்க சிறைச்சாலையில் உள்ள தொலைபேசி வாயிலாக இருவரும் திருமண உறுதிமொழி ஏற்று மணமுடித்துக் கொண்டனர்.
மனித உரிமைகள் வழக்குரைஞர், இந்த திருமணத்துக்கு உதவி செய்திருந்தார். கேஷானி வீட்டிலிருந்து குரான், சில இனிப்புகள் மற்றும் ஒரு சிவப்பு ரோஜா மட்டும் பாரம்பரிய வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டது.
இந்த திருமணத்தின்போது, அங்கிருந்த சில சிறை ஊழியர்களும் கண்ணீர் விட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த பலரும், இதுபோன்ற துணிச்சலான முடிவெடுக்க கேஷானிக்கு எவ்வாறு தைரியம் பிறந்தது என்று கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். செபாஹி திங்கள்கிழமை அதிகாலை அவருடன் போராடியவர்களுடன் சேர்த்து தூக்கிலிடப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மரண தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலையில் இருந்தவர் மீண்டெழுந்த நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.