நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (03) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் எனவும், அதனுடன் இணைந்து நாடு முழுவதும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலத்த மழை
இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்