டுபாய் சுதாவிடம் பணம் கொடுத்தவர்கள், உடன் அறிவிக்கவும் ; இலங்கை மக்களுக்கு முக்கிய தகவல்
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக “டுபாய் சுதா”விடம் யாராவது பணம் கொடுத்து ஏமாற்றமடைந்திருந்தால், உடனடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அனுமதிப் பத்திரம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முறையான அனுமதிப் பத்திரம் இன்றி, சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய் மற்றும் மால்டோவா நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, "டுபாய் சுதா" என அழைக்கப்படும் ரன்தெட்டிகே நிஸ்சங்க பிரியதர்ஷன என்பவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
டுபாய் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, இவர் 7 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, நேற்று பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கடுவெல பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் புலத்சிங்கள பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினர் என்பதுடன், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியே இந்த மோசடியை அவர் முன்னெடுத்து வந்துள்ளார்.
பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு அதிர்ச்சி; 12, 9, 8 வயது பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!
சுற்றுலா விசாக்கள் மூலம் நபர்களை டுபாய் நாட்டிற்கு வேலைக்காக அனுப்பும் முக்கிய கடத்தல்காரராக விளங்கும் இவர், இதற்கு முன்னரும் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இன்றி எவரையும் வெளிநாட்டு வேலைகளுக்காக சேர்த்துக்கொள்வது சட்டவிரோதமான செயலாகும்.
எனவே, நீங்களோ அல்லது உங்களது உறவினர்களோ வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த நபரிடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்திருந்தால், உடனடியாக பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் 0112882229 என்ற இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு அறியப்படுத்தவும்.