நுவரெலியாவில் கடும் மழை; போக்குவரத்து பாதிப்பு
நுவரெலியாவில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல வீதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (17) பிற்பகல் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதி, நுவரெலியா - பதுளை வீதி, நுவரெலியா - ஹட்டன் வீதி மற்றும் நுவரெலியா நகரின் சில சிறு வீதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரதேச மக்கள் மற்றும் வாகன சாரதிகள் போக்குவரத்தை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்வோரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மலைநாட்டில் அண்மைய நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையால், நுவரெலியா பிரதேசத்தின் தாழ்நிலப் பகுதிகளும் பல விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாகப் பயிரிடப்பட்டுள்ள மலைநாட்டுக் காய்கறிப் பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள கால்வாய்கள் முறையாகப் புனரமைக்கப்பட்டுப் பராமரிக்கப்படாததால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.