கொட்டித்தீர்த்த கனமழை ; வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு ; கடும் வாகன நெரிசல்
இடைக்கால பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து நேற்றையை தினம்(6) நாட்டில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் நிலைய தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி கொழும்பில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இந்தக் கனமழை காரணமாக பல பகுதிகளில் வௌ்ள நிலைமை ஏற்பட்டுள்ளது

கடும் வாகன நெரிசல்
இதன் போது பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
நாவலப்பிட்டி நகரத்தின் பஸ் நிலையம் மற்றும் நாவலப்பிட்டி-கண்டி பிரதான வீதியின் சுமார் ஒரு கிலோமீற்றர் வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பில் பெய்த கனமழை காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனைத்து வழித்தடங்களிலுமான ரயில் சேவைகளும் பிற்பகலில் பெரும் தாமதத்தை எதிர்நோக்கின.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, கதிரியக்க பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள் மற்றும் பல நோயாளர் விடுதிகள் நீரில் மூழ்கின.
வெள்ளப்பெருக்கு காரணமாக விபத்து பிரிவின் பல மின்தூக்கிகளும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.