சைவ உணவு பிரியர்களா நீங்கள்? உங்களுக்கான புரதச்சத்து நிறைந்த உணவுகள் இதோ!
சைவ உணவு பிரியர்களுக்கு அல்லது அசைவ உணவைக் கைவிட நினைப்பவர்களுக்கு ஒரு பொதுவான எண்ணம் உள்ளது. அவர்களுக்கு இறைச்சி உணவுகளை உட்கொள்ளமால் முழுமையான புரதம் கிடைக்காது என்ற சந்தேகம் உள்ளது. இதற்காக நீங்கள் கவலைக் கொள்ள தேவையில்லை. ஏனெனில் முழுமையான புரதச் சத்து கொண்ட சைவ உணவுகள் பல உள்ளன.
அவைகளில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்...
நட்ஸ் வகைகள் :புரதத்தின் சிறந்த மூலமாக நட்ஸ் வகைகள் இருப்பது மட்டுமல்லாமல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு. ஆனால், உப்பு கலந்த மற்றும் வறுத்த நட்ஸ்களை தவிர்க்க வேண்டும். பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பு போன்றவற்றை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊற பயன்படுத்தினால் அதன் முழுமையான ஊட்டச்சத்த்தை பெறலாம். 10 பாதாமில் 2.5 கிராம் புரதம் உள்ளதாக கூறப்படுகிறது.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் : சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மிகச் சிறந்த புரோடீன் உணவில், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. சமைக்கப்பட்ட ஒரு கப் உணவில் 15 கிராம் புரோட்டீன் உள்ளது. சோயா பீன்ஸ், பட்டாணி போன்றவற்றில் புரத சத்துடன், நார்ச்சத்தும் உள்ளதால், எடை இழப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேஎலும் இவை வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதால், அடிக்கடி பசி உணர்வு ஏற்படாது.
பிரோக்கலி : தாவர வகைகளில் புரதத்தை கொண்ட பிரோகலியில், உடலுக்கு தேவையான ஒன்பது அமிலங்களின் 8 அமிலங்கள் உள்ளது. இவற்றில் தண்ணீரில் கரையக்கூடிய விட்டமின்கள் உள்ளன. இதில் நார்ச்சத்துகளும் அதிகம் இருப்பதால் எப்பொழுதும் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.
ராகி : புரதம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய சூப்பர் உணவாக விளங்கும் ராகியை உனவில் அடிக்கடி சேர்ப்பது மிகவும் நல்லது. இதனை கொண்டு தோசை, இட்லி, ரொட்டி, சத்து மாவு போன்ற வடிவில் சாப்பிடலாம்.
பன்னீர் : பாலில் இருந்து உருவாகும் பன்னீரில், புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. 100 கிராம் பன்னீரில் 11 கிராம் புரதம் உள்ளதாக கூறப்படுகிறது. சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட பன்னீர் சிறந்த உணவு என்பதால், குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, இது பெரியவர்களுக்கு பிடித்த உணவு என்றால் மிகையாகாது.
கீரை : கீரை எளிமையான உணவாக இருந்தாலும் ஊட்டச்சத்து நிறைந்த சிற்ந்த உணவாகும். உங்கள் உணவில் புரதம், கனிமம், வைட்டமின் மற்றும் நார்ச்சத்து அதிக வேண்டும் என்றால் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.