திருமண நிகழ்வை சுற்றிவளைத்த சுகாதார அதிகாரிகள்: 100 பேர் தனிமைப்படுத்துதலில்
தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை மீறி, முந்தல்- கொத்தான்தீவு பிரதேசத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மணமகன், மணமகள் உள்ளிட்ட 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, முந்தல் வைத்திய சுகாதார பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் 10 குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திருமண நிகழ்வு கொத்தான்தீவு வைத்தியசாலைக்கு அருகிலேயே இடம்பெற்றதாகவும் இதில் கலந்துகொண்ட எவரும் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றியிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்ற இடத்தை சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்த போது, பலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
கொத்தான்தீவு பிரதேசத்தில் கடந்த வாரம் சட்ட திட்டங்களை மீறி பல திருமண நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.