இலங்கையில் நேருக்கு நேர் மோதிய லொறி - மோட்டார் சைக்கிள்! இருவர் வைத்தியசாலையில்
அம்பாறை மாவட்டம் - அக்கரைப்பற்றில் இடம்பெற்ற லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் அக்கரைப்பற்று, திருக்கோவில் பிரதான வீதி தம்பிலுவில் இன்று (27-09-2023) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருக்கோவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த லொறியும் திருக்கோவிலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேரும் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.