ஹட்டனை உலுக்கிய விபத்து... உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (21-12-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த 53 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 43 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் டிக்கோயா ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த விபத்தில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் கண்டி புறநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் உவைஸ் (68), ஹட்டன் தோட்டப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் தினேஷ்குமார் (14), நோர்வூட் மேற்பிரிவு பகுதியைச் சேர்ந்த முத்துராக்கு (67) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பேருந்து சாரதி தனது கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டே பேருந்தை செலுத்தி சென்றதாகவும், அதனாலேயே பேருந்து சாரதிக்கு பேருத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.