அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ஹரிணி உறுதி
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.
டித்வா பேரனர்த்தம் ஏற்பட்டு ஓராண்டு நிறைவு ; உயிரிழந்தோருக்குப் நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி
கடந்த நவம்பர் 25ஆம் திகதி இசுறுபாய கல்வி அமைச்சில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் கூட்டணியின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இதன்போது, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்விச் சேவையின் தொழில்முறைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்வித் தொழில்சார் பேரவையை நிறுவுவதற்கான சட்டமூலம் சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்மொழியப்பட்ட சம்பளக் கட்டமைப்பு தொடர்பான ஐந்து நிபந்தனைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அரச சேவையில் நிலவும் சம்பளம் மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் தமது முன்மொழிவுகளை குறித்த ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிபர்களுக்கு தொலைபேசிக் கொடுப்பனவு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.