ஹரக் கட்டாவின் குடும்பத்தினர் ஐ.நாவில் முறைப்பாடு
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்களை மறைப்பதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் உள்ள, வலிந்துக் காணாமல் ஆக்கப்படுவோர் தொடர்பான அலுவலகத்தில் ஹரக் கட்டாவின் குடும்பத்தினரால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
தனது மகன் மீது ஆயுதங்கள், போதைப்பொருள் அல்லது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவு செய்யப்படாமல், அவர் அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, ஹரக்கட்டாவின் தந்தை, தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
தமது மகன், பயங்கரவாத தடுப்புப் பிரிவின் காவலில் இருந்தப் போது, அதிகளவான கையூட்டலை கோரி அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அத்துடன், அவரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் பணம் கோரியமை தொடர்பிலும் தாம் அறிந்துள்ளதாக ஹரக் கட்டாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமது மகனுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அவர் எதுவும் பேச முடியாத நிலையில் உள்ளதாகவும் அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல், மோசமான உணவு தரம், அவரது மனைவி மற்றும் பிள்ளையைஅணுக முடியாமை மற்றும் மருத்துவப் புறக்கணிப்பு உள்ளிட்ட அவரது தடுப்புக்காவல் நிலைமைகள் குறித்தும் அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, தன்னிச்சையான மற்றும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட வகையில், ஹரக் கட்டா தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் இந்த விடயத்தில், ஐக்கிய நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஹரக் கட்டாவின் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.