சோழர் காலத்து சின்னங்களை கொண்ட கைத்தறி பட்டுபுடவை! மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னியின் செல்வன் படத்தின் தாக்கத்தால் உருவான சோழன் புடவை, வடஇந்திய நடிகை நைராவின் டிசைன் குர்தி என தொடங்கி செம்பு கரை வேட்டி வரை பல ரகங்கள் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளன.
தமிழக அரசின் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கோ-ஆப்டெக்ஸ் கடையில், சோழர் காலத்து சின்னங்களை கொண்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கைத்தறி பட்டுபுடவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.15,000 முதல் ரூ.1.50லட்சம் வரையிலான சோழர் சின்னங்களை கொண்ட புடவைதான் இந்த ஆண்டு அதிகளவில் மக்களை ஈர்த்துள்ளதாக கோ-ஆப்டெக்ஸ் விற்பனை பிரிவு பொது மேலாளர் ரவி தெரிவிக்கிறார்.
திருபுவனம் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த மணி, லதா தம்பதியின் கைவண்ணத்தில் சுமார் மூன்று மாத உழைப்பில் இந்த சோழன் புடவை உருவாகியுள்ளது.
"எங்கள் கூட்டு முயற்சியில் இந்த புடவையை நெய்துள்ளோம். பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு முன்னரே இந்த புடவை தயாராகிவிட்டது.
இந்த ஆண்டு இந்த புடவை நல்ல வரவேற்பை பெறுவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. சோழர் காலத்து அரசு சின்னங்கள், தஞ்சை பெரிய கோயில் சிலைகள், ராஜராஜசோழன், தலையாட்டி பொம்மை, கோயில் தூண், வில்,வாள், புலி, விளக்கு உள்ளிட்ட 32 சின்னங்களை புடவையில் நெய்திருக்கிறோம்,' என மணி - லதா தம்பதி தெரிவித்துள்ளனர்.
அடுத்ததாக, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்காக பிரத்யேகமாகவும் புடவைகளை தயாரித்துள்ளது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். பலர் கோ-ஆப்டெக்ஸ் புடவைகளை ஆன்லைன் வாயிலாக தங்கள் சொந்தங்களுக்கு அனுப்புகிறார்கள்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றிடம் பேசிய கோ-ஆப்டெக்ஸ் வடிவமைப்பாளர் தீபிகா,
''டென்மார்க், ஸ்வீடன் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் ஸ்காண்டிநேவியன் மக்களின் விருப்பங்களை அறிந்துகொண்டு, அங்கு பயன்படும் வண்ணங்கள் மற்றும் பூ வடிவங்களை கொண்டு இந்த ஆண்டு பட்டு புடவைகளை வடிவமைத்துள்ளளோம்," என்றார்.
"பட்டுப்புடவை என்பது இந்திய மக்களுக்கு நெருக்கமானது. ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் புடவை அணிய விரும்பும் ஸ்காண்டிநேவியன் மக்கள், அந்த நாட்டில் அதிகம் பயன்படுத்தும் பேஸ்ட்டல் வண்ணங்களில் புடவையை விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொண்டு, வெளிர் நிறங்களில் பட்டுபுடவை அறிமுகம் செய்துள்ளோம்,''என்கிறார்.