யாழில் காணி அளவீடு தடுத்து நிறுத்தம்; திரும்பிச்சென்ற அதிகாரிகள்!
யாழ்ப்பாணம் கீரிமலையில் கடற்படையின் பாவனைக்காக பொதுமக்களின் காணிகளை அளவிடும் முயற்சி காணி உரிமையாளர்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கீரிமலை ஜே/226 கிராமசேவகர் பிரிவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் கட்டப்பட்ட சொகுசு மாளிகைக்கு செல்லும் வீதியில், கிருஷ்ணன் கோயிலடியை அண்மிதத பகுதிகளில் உள்ள காணிகளே இவ்வாறு படையினருக்காக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படிருந்தது.
1990 ஆம் ஆண்டு முதல் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த காணிகளை உள்ளடக்கியதாக, கடற்படை முகாம் உள்ள நிலையில், அதில் 3 தனியாருக்கு சொந்தமான, 2 ஏக்கர் காணிகள் இன்று அளவிடப்படவிருந்தன.
இதையடுத்து காணி உரிமையாளர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளான எம்.கே.சிவாஜிலிங்கம், ச.சஜீவன். வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் அங்கு சென்று, இராணுவ முகாமிற்குள் நிலஅளவைத் திணைக்களத்தினர் நுழையவிடாமல் தடுத்தனர்.
எனினும் பிரதேச செயலாளர், இராணுவம் கலந்துரையாடி, நிலஅளவைத் திணைக்களத்தினரை வேறு பாதையினால் அழைத்து செல்ல ஏற்பாடு நடைபெறுகிறது என அங்கிருந்த மக்கள் மத்தியில் தகவல் பரவியதையடுத்து, நிலஅளவை திணைக்களத்தின் வாகனத்தை முன் பக்கமாகவோ, பின் பக்கமாகவோ செலுத்த முடியாதவாறு தடையேற்படுத்தினர்.
இதையடுத்து, தமது காணிகளை ஒப்படைக்க சமமதம் இல்லையென காணி உரிமையாளர்கள் கையொப்பமிட்ட கடிதங்களை பெற்றுக்கொண்டு நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.



