தேவேந்திரமுனை விகாரை பெரஹரா ; காவடி ஆட்டத்திற்காக துப்பாக்கிச் சூடு ; பலத்த பொலிஸ் பாதுகாப்பு
மாத்தறை, தேவேந்திரமுனை விகாரை பெரஹரா ஊர்வலம் தொடர்பில் இரண்டு பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் கருத்து முரண்பாடு, தற்போது துப்பாக்கிச் சூடு வரை தீவிரமடைந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
குறித்த விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்றுமுன் தினம் (21) இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னரே இந்த தகவல் வௌியாகியுள்ளது.

கொலை மிரட்டல்
தெஹிபாலே மல்லி' மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகிய திட்டமிட்ட குற்றவாளிகளே இம்மோதலுக்குப் பின்னணியில் இருப்பதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாறான பின்னணியில், நடைபெறவுள்ள தேவேந்திரமுனை விகாரை பெரஹராவிற்காக விசேட பாதுகாப்பு வழங்குவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடானது 'தெஹிபாலே மல்லி' எனும் குற்றவாளியின் தரப்பினரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
தேவேந்திரமுனை விகாரை பெரஹெரவில் கலந்துகொள்ளும் காவடி நடனக் குழுக்களைக் குறைப்பது தொடர்பாகக் கடந்த 20 ஆம் திகதி அந்த விகாரையின் பஸ்நாயக்க நிலமேக்கு நபர் ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், கஞ்சிபானை இம்ரானுக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படும் குரல் பதிவும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்நிலையிலேயே, குறித்த விகாரைக்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றிற்கு காரில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.