பாடசாலை விடுதியில் மாற்றுத் திறனாளி சிறுமிகளை சித்திரவதை செய்த காப்பாளருக்கு நேர்ந்த கதி!
அநுராதபுரத்தில் உள்ள விசேட பாடசாலையின் விடுதியில் உள்ள மாற்றுத் திறனாளி சிறுமிகளை சித்திரவதை செய்ததாக கூறப்படும் விடுதி காப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (12.10.2024) இடம்பெற்றுள்ளதாக அநுராதபுர பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அநுராதபுர பொலிஸ் அதிகாரி குழு ஒன்று இந்த காப்பாளரை கைது செய்துள்ளது.
இதன்படி, அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஜெயவீர, விடுதியில் வசிக்கும் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட செவித்திறன் குறைபாடுள்ள 7 சிறுமிகளை இந்த காப்பாளர் சித்திரவதை செய்ததாக தெரிவித்தார்.
மேலும் சித்திரவதைக்கு உள்ளான சிறுமிகளை சட்ட வைத்தியரிடம் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.