நெஞ்சை உருக்கும் சம்பவம்; பட்டினியால் உயிரிழந்த பச்சிளம் பாலகர்கள்
ஆப்கானிஸ்தானில் பசி, பட்டினியால் 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மனதை உருக்கும் இந்த சம்பவம் ஆப்கானில் காபூலில் இடம்பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தினராக ஹசாராக்கள் என்று அழைக்கப்படும் ஹசாரா இன மக்கள் உள்ளனர். இவர்கள் கடந்த கால தலிபான் ஆட்சியின் போது (1996-2001) இந்த ஹசாரா இன மக்கள் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.
தற்போது ஆப்கானிஸ்தானை மீண்டும் தங்கள் வசமாக்கியுள்ள தலிபான்கள் கடந்த முறையை போல அல்லாமல் ஹசாரா இன மக்களை தங்களது அரசு பாதுகாக்கும் என உறுதியளித்துள்ளனர்.
எனினும் அதற்கு நேர்மாறாக ஹசாரா இனமக்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த மாத தொடக்கத்தில் ஹசாரா இனத்தை சேர்ந்த 12 வயது சிறுமி உள்பட 13 பேரை தலிபான்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், ஹசாரா இன மக்கள் அதிகம் வாழும் மேற்கு காபூலில் சிறுவர்கள் 8 பேர் பசி, பட்டினியால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹாஜி முகமது மொஹகேக் என்பவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில் “மேற்கு காபூலில் வசித்து வரும் ஹசாரா இனமக்கள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முறையாக கிடைக்கவில்லை. இதன் காரணமாக பசி, பட்டினியால் சிறுவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.