வடக்கில் உள்ள ஆலயங்கள் தொடர்பில் ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை!
வடக்கில் உள்ள ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்வதாக வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார்.
அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (07) இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் தெல்லிப்பழை பிரதேச செயலக உதவி அரசாங்க அதிபராக இருந்தமையை நினைவுகூர்ந்து அன்றைய நாட்களில் அம்மையாருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
சமூகப் பணிகள் எமது மக்களுக்கு மிக அவசியமானவை
போர் மற்றும் இடப்பெயர்வுகளின் போதும் அம்மையார் சமூகப் பணிகளை திறம்பட முன்னெடுத்தமையைச் நேரில் கண்டேன். அன்றைய காலத்தில் ஆலயங்கள் சமூகப் பணிகளை முன்னெடுக்காதிருந்த சூழலில், அம்மையார் அவர்களே அதனைத் தொடக்கி அதன் முன்னோடியாக இருந்ததார்.
ஆனால் இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப்படியேறியுள்ளன. புலம்பெயர் தேசங்களிலிருந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டாலும் ஆலய நிர்வாகங்கள் ஒழுங்காக கணக்கறிக்கைகள் முன்வைப்பதில்லை இது பிரச்சினைகளுக்கு அடிநாதமாக இருக்கின்றது.
தனது காலத்தின் பின்னரும் இந்த அறப்பணிகள் தொடர்ந்தும் தடையுறாது முன்னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமான ஒருவரான கலாநிதி ஆறுதிருமுருகனை அம்மையார் வளர்த்து அடையாளம் காட்டியுள்ளார்.
புலம்பெயர் மக்களின் பங்களிப்பு
அவரின் சேவைகளைப் தொடரவேண்டும் காய்க்கின்ற மரம் கல்லெறி படுவதைப்போல அவர் மீதும் பலர் விமர்சனங்களையும் குறைகளையும் முன்வைக்கின்றனரே தவிர அவர் செய்யும் சேவைகளைப் பாராட்ட முன்வருவதில்லை.
எமது சமூகத்தில் இந்த விடயம் இப்போது ஆழமாக வேரூன்றி விட்டது ஆறுதிருமுருகன் மீதான நம்பிக்கையிலேயே புலம்பெயர் தேசத்திலிருப்பவர்களும் இங்கிருப்பவர்களும் அவர் ஊடாக உதவிகளைச் செய்ய முன்வருகின்றனர்.
இந்தச் சமூகப் பணிகள் எமது மக்களுக்கு மிக அவசியமானவை இதைத் விடாது தொடரவேண்டும் என்றும் வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் இதன்போது கூறினார்.