அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளுக்காக துமிந்தவிற்கு மன்னிப்பு வழங்கப்படாது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது என பிரதி நீதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்தவின் குடும்பத்தினர் தங்களது தொலைக்காட்சியில் எவ்வாறான செய்திகளை வெளியிட்டாலும், துமிந்தவை விடுதலை செய்ய முடியாது என மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு அஞ்சப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
தொலைகாட்சி அலைவரிசை அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் வேண்டுமென்றே அரசாங்கம் மீது அழுத்தம் பிரயோகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் எனவும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்தவின் உடல் நிலை குறித்து மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்டவர்களை படுகொலை செய்த வழக்கில் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் துமிந்தவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
எனினும், இந்த தீர்ப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மேன்முறையிட்டின் அடிப்படையில் குறித்த பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.