சிறிலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் தீர்மானம்
ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்வதற்கு கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட தீர்மானத்தை தற்போதைய புதிய அரசாங்கம் கைவிட்டுள்ளதாக, நிறுவனத்தின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை அதிக இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்குத் தேவையான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் புதிய தலைவர் சரத் கனேகொட தெரிவித்துள்ளார்.
விமான சேவை நிறுவனத்தின் புதிய தலைவர் சரத் கனேகொடவை மேற்கோள்காட்டி TTG Asia இணையத்தளம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பல வருடங்களாக நட்டத்தை ஈட்டி வந்துள்ளது.
இந்நிலையில், அதில் பங்குகளை கொள்வனவு செய்யவும் நிர்வகிப்பதற்கும் கடந்த அரசாங்கம் விலைமனுக்களை கோரியிருந்தது. இத்திட்டத்தின் கீழ், விமான நிறுவனத்தின் 51 வீத பங்குகள் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும்.
மீதமுள்ள 49 வீதம் முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது. அதற்கிணங்க ஆறு தரப்பினர் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.ஆனால் அவர்கள் எவரும் குறித்த முறைமையின் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெறவில்லை.
அதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த 2022 ஏப்ரல் முதல் மார்ச் 2023 வரையிலான காலப்பகுதியில், இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றம் பெற்றுள்ளது.
அந்த வகையில் அதன் திரட்டப்பட்ட கடன் 1.2 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது. நாட்டின் சுற்றுலாத்துறை. வளர்ச்சிக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை மிக முக்கிய பங்காற்றுவதாகவும் அதன் தலைவர் கனேகொட தெரிவித்துள்ளார்.