வலி.வடக்கு காணி விடுவிப்பில் அரசுக்கு கடும் விமர்சனம் ; சிறிதரன் குற்றச்சாட்டு
காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது , மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கோரியுள்ளார்.
மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு கோரி நடைபெற்ற கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், யுத்தம் காரணமாக 36 வருடங்களுக்கு முன்னர் வலி. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் , யுத்தம் முடிவடைந்து , 17 வருடங்கள் கடந்த நிலையிலும் சொந்த மண்ணில் மீள் குடியேற அனுமதிக்கவில்லை.

தற்போதும் அந்த மக்கள் , தமது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளிலும் , வாடகை வீடுகளிலும் தங்கி வாழ்கின்றனர் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் காணிகளை விடுவிப்போம் என கூறி ஆட்சிக்கு அநுர அரசாங்கம் வந்து இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவில்லை மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாய பண்ணைகளை நடாத்தி வருகின்றனர்.
தோட்டங்களில் விவசாயம் செய்து மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த காணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட வில்லை.
17 வருடங்களாக யுத்தங்கள் இல்லாத போதிலும் மக்கள் இன்னமும் தெருக்களில் வாழ்கின்றார். இந்த அரசாங்கமும் , முன்னைய அராஜக அரசாங்கம் போன்றே செயற்படுகின்றனர்.
மக்களின் கோரிக்கைகள் நியாயமானது. சர்வதேச அமைப்புக்கள். மனித உரிமை செயற்பாட்டளர்கள் என இங்கே நேரில் வந்து இந்த காணிகளை பார்வையிட்டால் தெரியும்.
இங்கு இராணுவ முகாம்களுக்காக காணிகளை கையகப்படுத்தவில்லை என இந்த மக்கள் தமது சொந்த காணிகளில் விவசாயம் செய்து அவர்கள் தமது வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ள வேண்டும்.
ஆனால் இங்கு தனியார் காணிகளில் இராணுவ வைத்தியசாலையை கட்டி , தனியார் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்கிறது.
இந்த காணிகளை உடனடியாக விடுவியுங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் , விடுவிக்கப்பட வேண்டிய காணிகளையும், இன்னமும் மீள் குடியேற்றப்படவுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்பில் விபரங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம்.
அதன் அடிப்படையில் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டிய தொடர் அழுத்தங்களை கொடுக்கவுள்ளோம் மக்களின் நியாமான கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிமடுத்து , மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காலங்களை இழுத்தடிக்கும் வார்த்தைகளை தவிர்த்து, மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.