தற்போதைய அரசாங்கம் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துள்ளது ; நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் அசாத்தியமான எதிர்பார்ப்புகளையும் பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கி அதிகாரத்தைப் பெற்றதாகவும், நாட்டின் இளைஞர் சமூகத்தின் எதிர்காலத்தை முற்றாக நாசமாக்கியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய போது அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்குவதாகவும், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாப்பதாகவும் கூறி மக்களை ஏமாற்றியதாக தெரிவித்தார்.

ஆனால் தற்போது அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், பட்டதாரிகள் வேலைவாய்ப்புகளை கோரி சென்றபோது அவர்கள் அவமதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரச சேவையின் கௌரவம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அரசாங்கம் வெறுப்புணர்வு, பொறாமை மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகளவில் உணவுப் பற்றாக்குறை அபாயம் நிலவும் நிலையில், அரசாங்கம் அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும், அரிசி இறக்குமதி திட்டங்களே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
உள்நாட்டு விவசாயிகளுக்கு உரம் மற்றும் நியாயமான விலை வழங்கப்படவில்லை எனவும், வரி விதிப்புகள் மக்கள் மீது கடுமையான சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வருமானத்திற்கும் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் முந்தைய அரசாங்கங்கள் மீது பழியை சுமத்தி தப்பிக்க முயலுவதாகவும், மக்களை ஒடுக்குதல் மற்றும் பொய்யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.