அரச வைத்தியர்களின் அச்சுறுத்தல்கள் ; மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு
சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே கனிஷ்ட வைத்தியர்கள் தமது பயிற்சிக்கோப்பின் பின்னரான (Post-Internship) நியமனங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சுமத்தியுள்ளது.
இது குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாச தெரிவிக்கையில்,
அரச சேவையிலிருந்து நீக்குதல், சம்பளத்தை நிறுத்திவைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ விடுதிகளிலிருந்து வெளியேற்றுதல் போன்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதால் கனிஷ்ட வைத்தியர்கள் தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

தொழில்சார் சிக்கல்களை முறையான கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கவே மருத்துவர்கள் விரும்புகின்றனர்.
இருப்பினும், சுகாதார அமைச்சர் அத்தகைய பேச்சுவார்த்தைகளைத் தவிர்த்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவர்களின் போராட்டம் காரணமாக அரச மருத்துவமனைகளின் நாளாந்தச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைகளுக்காக வருகை தந்த நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டபூர்வமான முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய வேலைநிறுத்தப் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.