விமான நிறுவனங்களிடம் வரியை அறவிட அரசாங்கம் உரிய வேலைத்திட்டம்
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாத விமான நிறுவனங்களிடமிருந்து வரியை அறவிடுவதற்கான உரிய வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபைக்கு களவிஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சில விமான நிறுவனங்கள், சிவில் விமான சேவைகள் அதிகாரசபைக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை இது வரையிலும் செலுத்தவில்லை.
நாம் அதனை அறவிடுவதற்கு எதிர்பார்க்கிறோம்.பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.ஸ்ரீ லங்கன் விமான சேவை சீர்குலைக்கப்பட்டே வழங்கப்பட்டது
இந்தநிலையில், தற்போது அதனை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டுள்ளோம்.ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 3 விமானங்கள் இயந்திரங்களின்றி 3 வருடங்களாக தரிக்கப்பட்டு உள்ளன.
அவற்றுக்காக மாதாந்தம் 9 இலட்சம் ரூபாயை கடந்த அரசாங்கம் செலுத்தியுள்ளது. குறித்த மூன்று விமானங்களில் ஒரு விமானத்திற்கான இயந்திரத்தை பொருத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
ஏனைய இரண்டு விமானங்களையும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக செயற்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.