பெருந்தோட்டத் துறையில் சம்பள சிக்கல் ; மலையக பெண்களின் உரிமை பாதுகாப்புக்கு அரசு உறுதி
தனியார் பெருந்தோட்டத் துறையில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண் தொழிலாளர்களுக்கு முழுச் சம்பளம் வழங்கப்படாமை தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பெருந்தோட்ட அமைச்சு அறிவித்துள்ளது.
கர்ப்பமானது முதல் பிரசவத்திற்குப் பிந்தைய ஆறு மாத காலம் வரை, நாளாந்த கொழுந்து பறிப்பு இலக்கை எட்டாத பெண்களுக்கு சில தோட்ட நிறுவனங்கள் அரை நாள் சம்பளம் மட்டுமே வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து அரசாங்கம் தலையீடு செய்து தீர்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட பெருந்தோட்டப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அரசுக்கு சொந்தமான தோட்டத் துறைகளில் பெண் தொழிலாளர்கள் முழுச் சம்பளம் பெறுகின்றனர் என்றும், அதே சலுகையை தனியார் துறையிலும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ பரிசோதனைக்குச் செல்லும் நாட்களில் சம்பளம் வழங்கப்படாமை தொடர்பான பிரச்சினையும் உடனடியாக தீர்க்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மலையக மறுசீரமைப்புக்கான சிவில் கூட்டமைப்பின் அமைப்பாளர் செல்வராஜா இராஜசேகர், கர்ப்பிணி பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிலைமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
மலைப்பாங்கான தோட்டங்களில் நீண்ட தூர பயணம், பாதுகாப்பற்ற பணிச்சூழல், சுகாதார வசதிகளின் பற்றாக்குறை, மற்றும் உயிராபத்தான சூழ்நிலை போன்ற காரணங்களால் கர்ப்பிணி பெண்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அரசாங்கத்தின் புதிய தலையீடு மலையக தோட்டப் பெண் தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்தும் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.