கோட்டாபய ராஜபக்சவுக்கும் இதய அறுவை சிகிச்சை!
முன்னாள ஜ்னாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதய அறுவை சிகிச்சைக்கு சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்குமாறு கோரி, நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் பிரசன்ன அமரசேகரவிடம் மனு
முன்னாள் ஜனாதிபதி சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள், கோட்டை நீதவான் பிரசன்ன அமரசேகரவிடம் இந்த மனுவைச் சமர்ப்பித்தனர்.
தங்கள் கட்சிக்காரருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதைக் குறிப்பிட்டு, அவர் மீதான பயணத் தடையை நீக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையொன்றில் மேற்கொள்ளப்படவுள்ள இதய அறுவை சிகிச்சை மற்றும் அதன்பின்னர் தேவைப்படும் மருத்துவக் கவனிப்புக்காக, அவர் சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), கோட்டை நீதவானிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.