இட்லிக்கு பெருமை சேர்த்த கூகுள் டூடுள்
கூகுள் அவ்வப்போது முக்கிய நாள்கள், முக்கிய நபர்களின் டூடுளை வெளியிட்டு சிறப்பு சேர்க்கும் வகையில், இன்று கூகுள் முகப்புப் பக்கத்தில் தென்னிந்திய உணவுகளில் முக்கியமானதாக இருக்கும் இட்லியை டூடுளாக வெளியிட்டுள்ளது.
Google என்ற கூகுள் என்ற வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் இட்லி உருவாகும் விதம் முதல், அது பரிமாறப்படுவது வரை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இட்லிக்கு டூடுள்
ஜி என்பதை அரிசி மற்றும் உளுந்தைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது.ஓ என்ற வார்த்தை, இட்லி மாவு கரைத்து வைத்திருக்கும் பாத்திரம் போலவும், மற்றொரு ஓ, இட்லி பாத்திரத்தில் வேக வைப்பது போன்றும் உள்ளது. பிறகு ஜி வரிசையாக இட்லிகளை அடுக்கி வைத்தும், எல் என்ற வார்த்தை அதற்கான இணை உணவுகளைக் கொண்டதாகவும், நிறைவாக இ என்ற வார்த்தை இணை உணவுகளுடன் சேர்ந்த இட்லியை விளக்குவது போல அமைக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தென்னிந்திய உணவுகளில் இட்லிக்கு முதலிடம் உண்டு. இன்று இட்லிக்கு டூடுள் வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கிறது கூகுள்.
அது பற்றிய விளக்கத்திலும், இன்று இட்லி கொண்டாடப்படுகிறது. அரிசி மற்றும் உளுந்து சேர்த்து அரைத்து ஆவியில் வேகவைத்து சாப்பிடும் உணவு என்று குறிப்பிட்டுள்ளது.