சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
நாட்டில் இதுவரை விநியோகிக்க முடியாத சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அச்சிடுவதற்கு அட்டைகள் இல்லாதமையால் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதுடன், அதற்கு பதிலாக, தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது.

சாரதி அனுமதி பத்திரங்கள்
அதன்படி, அச்சிடுவதற்கு கிடைக்கக்கூடிய சாரதி அனுமதி பத்திரங்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி மூன்று இடங்களில் மேற்கொள்ளப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, வேரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம், ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரத்தில் உள்ள மையங்களிலும் இந்த பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய, நாளாந்தம் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இவற்றில், ஒரு நாள் சேவையின் கீழ் 1,500 சாரதி அனுமதி பத்திரங்களும் சாதாரண சேவையின் கீழ் 4500 சாரதி அனுமதி பத்திரங்களும் வழங்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நிலுவையில் உள்ள சாரதி அனுமதி பத்திரங்களை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அச்சிட்டு விநியோகிக்க முடியும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் மேலும் ஒரு மில்லியன் சாரதி அனுமதி பத்திரங்களுக்கான அட்டைகள் நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.