டிட்வா சூறாவளி பாதித்த மீனவர்களுக்கு ஜப்பான் வழங்கிய நற்செய்தி
‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் கடற்றொழிலாளர்களின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 29ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் இடம்பெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப மற்றும் நடைமுறை உதவிகளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organization) (FAO) வழங்கவுள்ளது.

ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமதா (Akio Isomata) மற்றும் FAO இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி விம்லேந்திர ஷரன் (Vimlendra Sharan) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 நீர்நிலைகளில் 200 மீன் கூடுகள் அமைக்கப்படவுள்ளன.
மீன் வளர்ப்பிற்குத் தேவையான மிதக்கும் வலை அமைப்புகள் வழங்கப்படவுள்ளதுடன், இங்கிநியாகல மீன் இனப்பெருக்க மையத்தின் வசதிகளை மேம்படுத்த ஹார்மோன்கள் மற்றும் இரசாயனப் பொருட்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும், கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு நவீன மீன் வளர்ப்பு முறைகள் தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன், முதலாவது மீன் வளர்ப்புச் சுற்றுக்குத் தேவையான மீன் குஞ்சுகள் மற்றும் தீவனங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் சூறாவளியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, நாட்டில் நிலையான மீன் உற்பத்தியை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாக அமையும் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.