இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு விரைவில் ஓட்டுநர் உரிமங்களை வழங்க இத்தாலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (15) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை வழங்கிய ஓட்டுநர் உரிமத்தில் உள்ள பல தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக இத்தாலிய அரசாங்கத்தால் ஓட்டுநர் உரிமத்தை அங்கீகரிக்க முடியவில்லை என்றும், இந்தப் பிரச்சினை மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் உரிமம்
இத்தாலிய அரசுக்கு அடையாளம் காணக்கூடிய வகையில் இந்த நாட்டிலிருந்து ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதன் மூலம், தொடர்புடைய தொழில்நுட்பப் பிழைகளைத் தவிர்த்து, இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் இலங்கை ஓட்டுநர் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டன. இது தற்போதைய அரசாங்கத்தின் தவறு அல்ல என்றும், முன்னாள் தூதர்களால் ஏற்பட்ட பிரச்சினையின் விளைவாக, இத்தாலிய நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அதை மீண்டும் பெறுவதற்கு இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக இத்தாலிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு விரைவில் ஓட்டுநர் அனுமதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.