நெற்செய்கை விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; 75 சதவீதமான உர மானிய நிதி விநியோகம்
நடப்பு சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த நிலப்பரப்பில் 75 சதவீதமான நிலப்பரப்பிற்கான உர மானியத்திற்கான பணம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த மானியக் கொடுப்பனவுக்காக 8,990 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மேலும் 2,000 மில்லியன் ரூபாய் நிதியை இந்த வாரத்திற்குள் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உர மானிய திட்டத்தின் கீழ், விவசாயி ஒருவருக்கு தலா 30,000 ரூபாய் வீதம் நிதி உரித்தாகிறது. இம்முறை 394,299 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விவசாய அபிவிருத்தி நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு ஒரு மூடை யூரியா உரம் 10,200 ரூபாய் என்ற விலையில் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில், யூரியா மற்றும் எம்.ஓ.பி (MOP) உரங்களை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இந்த மாதத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, உஸ்பெகிஸ்தானில் இருந்து 18,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பலும், ஓமானில் இருந்து 17,000 மெற்றிக் தொன் எம்.ஓ.பி உரத்தை ஏற்றிய கப்பலும் நாட்டை வந்தடையவுள்ளன.