யாழ்.போதனா வைத்தியசாலையால் கையை இழந்த சிறுமி ; தாதிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர் நேற்று (24) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாத வகையில் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
வைத்தியத் தவறு
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமி காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மணிக்கட்டில் கனோலா ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது.
இந்த விடயத்தில் வைத்தியத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு தரப்பினரிடம் தமக்கான நீதியையும் கோரியிருந்தனர். இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் உசைன் முன்னிலையில் கடந்த 23 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், இது தொடர்பான மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறும், விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, குறித்த தாதிய உத்தியோகத்தர், சிறுவர், பெண்கள் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அந்தத் தாதிய உத்தியோகத்தருக்குப் பிணை வழங்கிய நீதவான், அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதவாறு பயணத்தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.