யாழில் ஈவிரக்கமின்றி கன்றுத்தாச்சி மாட்டை அறுத்த கயவர்கள்!
யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை பகுதியில் கன்றுத்தாச்சி மாடொன்றினை இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தை அடுத்து ஊரவர்கள் கண்டு மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அவர்கள் தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
ஊர்காவற்துறை,சுருவில் பகுதியில், இன்று (22) உயர் ரக கேப்பை இன கன்றுத்தாச்சி பசுமாட்டினை கடத்தி சென்று, ஆட்கள் அற்ற இடத்தில் அதனை வெட்டி, வயிற்றினுள் இருந்த கன்றினை வெளியே வீசி விட்டு, இறைச்சியை துண்டுகளாக வெட்டிக்கொண்டிருந்த வேளை ஊரவர்கள் மாட்டினை வெட்டியவர்களை மடக்கி பிடிக்க முற்பட்டனர்.
அவ் வேளை, தமது மோட்டார் சைக்கிள், இறைச்சி என்பவற்றை கைவிட்டு விட்டு, அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றும், சுமார் 200 கிலோ எடையுடைய மாட்டிறைச்சியும் ஊரவர்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள், இறைச்சி என்பவற்றை மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் கன்றுத்தாச்சி பசு மாடொன்றினை கடத்தி , இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஊரவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், தொடர்ச்சியாக தீவக பகுதிகளில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் சட்டவிரோத நடவடிக்கை அதிகரித்து செல்வதானால் அதனை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.