விசேட கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை பிரதமர்!
இலங்கையில் பதிவாகும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் மற்றும் சந்தைக்கு வெளியிடப்பட்டதாக கூறப்படும் தரமற்ற சமையல் எரிவாயு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த விசேட கூட்டமானது செவ்வாய்க்கிழமை (21) இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த் கூட்டத்திற்கு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள், எரிவாயு தொடர்பான விபத்துக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை, இலங்கை தர நிர்ணய நிறுவனம், இலங்கை பெட்ரோலியம் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பான சம்பவங்களுக்கான மூல காரணத்தை கண்டறிந்து, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் கருத்துகள் மற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றை ஆலோசித்து சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே இந்த சந்திப்பின் நோக்கம் என்றும் கூறப்படுகின்றது.