வீட்டை உடைத்து பல இலட்சம் கொள்ளையிட்ட கும்பல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்செட் பகுதியில் 810.000 ரூபாய் பெறுமதி வாய்ந்த தங்க நகையும், பணத்தினையும் திருடிய நபரை நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் நேற்று (24) உத்தரவிட்டார்.
வீட்டில் உள்ளவர்கள் கடந்த (16) திகதி வெள்ளிக்கிழமை வெளியில் சென்றிருந்த நிலையில் வீடுடைத்து இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் நானுஓயா குற்றத்தடுப்பு பிரிவில் (23) திகதி முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பில் நானுஓயா தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி முதன்மை பொலிஸ் பரிசோதகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
பின்னர் நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் நானுஒயா சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அவரிடமிருந்து நகைகள்,பணம் மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை என்பன கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருடப்பட்ட தன்னியக்கப் பணப்பரிமாற்ற அட்டையைக் கொண்டு 50 ஆயிரம் ரூபாவை எடுத்து பொருட்கள் கொள்வனவு செய்துள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கைது செய்து நானுஓயா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேற்கொண்ட மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.