இளைஞனை துரத்தி துரத்தி சுட்டுக் கொன்ற கும்பல்; இரகசிய தகவலால் சிக்கிய சந்தேகநபர்கள்
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இளைஞன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நேற்று (24) அதிகாலை நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
குற்றச் செயலுக்கு உதவி
குறித்த இளைஞன் பொரலஸ்கமுவ பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, இந்த குற்றச் செயலுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுகளை கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி தப்பிச் செல்ல பயன்படுத்திய முச்சக்கரவண்டி பிலியந்தலையில் உள்ள போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.