இன்று விக்கினங்களை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி; தப்பித்தவறி கூட பூஜையில் இதை பயன் படுத்தாதீங்க!
இன்று விக்கினங்களை தீர்க்கும் விநாயக சதுர்த்தி விரதமாகும். வினைதீர்க்கும் விநாயகரை வணங்கினால் எந்த சாபமாக இருந்தாலும் விலகிவிடும் என பெரியவர்கள் கூறுவார்கள்.
விநாயகருக்கு எளிமையான அருகம்புல்லும் எருக்கம் பூ மாலையும் பிடித்தமானது. அதே நேரத்தில் துளசியை தப்பித்தவறி விநாயகர் பூஜைக்கு பயன்படுத்தி விடக்கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
புராணக்கதை
துளசி மரணத்தின் கடவுளான எமதர்மனின் மகள் ஆவார். அவர் தன் இளம் வயதில் விஷ்ணுவின் தீவிர பக்தையாக இருந்தார். அவர் தினமும் கங்கை நதிக்கரையில் உள்ள விஷ்ணுவின் கோவிலுக்கு சென்று நதியில் நீராடிவிட்டு விஷ்ணுவை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவ்வாறு தினமும் செய்துகொண்டிருந்த போது ஒரு நாள் கங்கையின் மறுகரையில் ஒருவர் தியானத்தில் அமர்ந்து இருப்பதை பார்த்தார்.
அவரின் தேஜஸை கண்டு மயங்கிய துளசி அவர் மேல் காதலில் விழுந்தார். அந்த தியானத்தில் இருந்தவர் வேறு யாருமல்ல விநாயகர்தான். தியானத்தின் போது அவர் எழுப்பிய ஒலி அவரின் வசீகரத்தை மேலும் அதிகரித்தது. இதனால் அவரிடம் சென்று தன் காதலை வெளிப்படுத்த எண்ணினார். அதனை நிறைவேற்றவும் செய்தார். உடனடியாக பிள்ளையாரிடம் சென்று தன்னை மணந்துகொள்ளும்படி கேட்டார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத பிள்ளையார் அமைதியாக துளசியின் காதலுக்கும், திருமணம் பற்றிய வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவித்தார். துளசி அதற்கு காரணம் கேட்டபோது தான் தன் தந்தை சிவபெருமானுக்கு எப்படி பார்வதி தேவி சிறந்த துணையாக இருக்கிறாரோ அதேபோல தானும் தனக்கு தன் அன்னையை போல இருக்கும் பொருத்தமான பெண்ணையே திருமணம் செய்துகொள்ள இயலும் என்றும் விநாயகர் கூறினார்.
விநாயகரின் இந்த பதில் துளசியின் கோபத்தை அதிகரித்தது, இதை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதினார். தன் உணர்ச்சிகளை மதிக்காத பிள்ளையாரை அதற்காக தண்டிக்க எண்ணினார். எனவே பிள்ளையாருக்கு சாபமிட துணிந்தார். தன் காதலை மதிக்காத பிள்ளையாருக்கு வருங்காலத்தில் அவர் எண்ணங்களுக்கு எதிராகவே திருமணம் நடக்க வேண்டும் என்று சாபமிட்டார்.
அதுவரை பொறுமைகாத்த பிள்ளையார் துளசியின் சாபத்தால் கோபமுற்றார். எனவே வருங்காலத்தில் நீ ஒரு அசுரனைத்தான் திருமணம் செய்துகொள்வாய் என்று விநாயகர் துளசிக்கு சாபமிட்டார்.
தன் தவறை உணர்ந்த துளசி விநாயகரிடம் மன்னிக்கும்படி கெஞ்சினார். துளசி கண்ணீர்விட்டு கெஞ்சுவதை பார்த்த விநாயகர் மனமிறங்கினார். பிள்ளையார் தான் அளித்த சாபத்தையே வரமாக மாற்றினார். அதன்படி விஷ்ணுவின் அருளால் துளசி புனிதமான துளசி செடியாக மறுபிறப்பு எடுப்பாய் எனவும், விஷ்ணுவை உன்னை கொண்டு பூஜிப்பார்கள் எனவும் கூறினார்.
ஆனாலும் நீ என்னிடம் இருந்து எப்போதும் விலகிதான் இருப்பாய் என்னை உன்னை கொண்டு பூஜிக்கக்கூடாது என்று கூறினார். இதன் காரணமாக தான் இன்றைக்கும் விநாயகர் பூஜைக்கு துளசி பயன்படுத்தாமல் உள்ளதன் காரணம் இதுதான்.
வினை தீர்க்கும் விநாயகர்
பொதுவாக எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன் வினை தீர்க்கும் விநாயகரை வழிபட்டுத் தான் தொடங்க வேண்டும் என்பது இந்து மதத்தின் நம்பிக்கை ஆகும் .
எனவே பிள்ளையாருக்கு அப்பம், மோதகம், கொழுக்கட்டை, முருக்கு, பழங்கள் ஆகியவை மிகவும் பிடிக்கும் என்பதால், அவற்றை பிரசாதமாக அவருக்கு வைத்து விநாயக பெருமானின் அருளை பெறுவோமாக.