கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் ; அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரும் விசாரணைகள்
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவுகளைப் பெற எதிர்பார்ப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான கெஹெல்பத்தர பத்மே குறித்த விசாரணைகள் பற்றி விளக்கமளிக்கும் போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உப காவல்துறை பரிசோதகர் பிரேம குமார இந்த அறிவிப்பை விடுத்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலங்களாகத் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் சட்டத்தரணி, தாமரா குமாரி அபேரத்ன என்பவராவார்.
கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்குச் சுட்டுக் கொன்றவருக்கு இந்தச் சட்டத்தரணி உதவி வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சந்தேக நபரான சட்டத்தரணி, துப்பாக்கிதாரிக்கு தேவையான சில பொருட்களை வழங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரண்டு டை பெல்ட்கள், சட்டத்தரணிகளின் வாகனங்களில் பயன்படுத்தப்படும் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒன்று. தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிய இரண்டு நூல்கள் சட்டத்தரணி அடையாள அட்டை தயாரிப்பதற்குத் தேவையான புகைப்படங்கள் ஆகியவை அடங்கும்
சந்தேகநபரான சட்டத்தரணி நீண்டகாலமாக பிரதான சந்தேக நபரான கெஹெல்பத்தர பத்மே என்பவருடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும், அது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
கெஹெல்பத்தர பத்மேவுடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்புகளைப் பேணியதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து (5) நடிகைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீ இந்த நடிகைகள் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புகளைப் பேணியதன் ஊடாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பணமோசடி அல்லது ஆயுதங்கள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
கெஹெல்பத்தர பத்மேவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு மைக்ரோ வகை பிஸ்டல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பிஸ்டல் காலிப் பிரதேசத்தில் நடந்த குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன. மீட்கப்பட்ட பிஸ்டலை அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்து அறிக்கை பெற CID செய்த கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொண்டார்.
இந்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.