யாழில் கொரோனா அபாயத்திலும் பெருமெடுப்பில் இடம்பெற்ற இறுதி ஊர்வலம்!
யாழில் கொரோனா தொற்று அதிகமாகிவரும் நிலையில், குருநகரில் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் அஸ்திக்கு இறுதி கிரியை மேற்கொள்ளப்பட்டபோது, பெருமளவானவர்கள் ஊர்வலமாக சென்ற சம்பவம் தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.
இறுதிக்கிரியை நிகழ்வில் பாடை கட்டி, நிலப்பாவாடை விரிக்கப்பட்டு ஊர்வலம் சென்றதுடன், உயிரிழந்த இளைஞனை தற்காப்பு கலை மன்னன் புரூஸ்லியாக சித்தரிக்கும் சுவரொட்டிகள் குருநகரின் அனேக பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது.
கடந்த 22ஆம் திகதி குருநகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் எட்மண்ட் ஜெரன்ஸ் (24) என்ற இளைஞன் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 24ஆம் திகதி உயிரிழந்தார்.
குருநகர்- பாஷையூர் குழுக்களிற்கிடையிலான நீண்டகால மோதலின் எதிரொலியாக இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டிருந்தது. உயிரிழந்த இளைஞனிற்கு மேற்கொள்ளப்பட்ட 2 பிசிஆர் பரிசோதனையில் கொரோனா உறுதியானதையடுத்து நேற்று முன்தினம் அவரது சடலம் தகனம் செய்யப்பட்டு அஸ்தி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்றையதினம் இளைஞனின் அஸ்திக்கு இறுதி கிரிகைகள் செய்யப்பட்டது. பொலிசார், சிறிய எண்ணிக்கையானவர்களுடன் இறுதிச்சடங்கை செய்ய அனுமதித்தபோதும் , அதை கணக்கில் கொள்ளாது ஏராளமானவர்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.
அத்துடன் இறுதிச்சடங்கில் அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் பாடை கட்டி , வெடி கொளுத்தி , நில பாவாடை விரித்து , மேளங்களுடன் பெரும் ஆரவாரத்துடன் இளைஞனின் அஸ்தியை வீட்டிலிருந்து கொட்டடி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஸ்தி அடக்கம் செய்யப்பட்ட பின்னர், புறாக்களும் பறக்க விடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.