நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்; நால்வரின் இறுதிக்கிரியை இன்று
கடுவலை நகர மத்தியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள், தலாஹேன பிரதேசத்திலுள்ள வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கிரியைகாள் இன்று இடம்பெறவுள்ளது.
பிரேதப் பரிசோதனை நடவடிக்கைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் வசித்த வீட்டிற்குச் சடலங்கள் கொண்டுவரப்பட்ட வேளையில் பெருமளவிலானோர் அங்கு திரண்டிருந்தனர்.

கடந்த 19ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், குறித்த கட்டடத்தில் மின்சார உபகரண விற்பனை நிலையமொன்றை நடத்தி வந்த 35 வயதுடைய நாரத சந்தருவன், அவரது 28 வயதுடைய மனைவி லக்ஷிகா மதுஷானி மற்றும் அவர்களது மகள்களான 5 வயதுடைய திலேனி ஹசன்யா, 2 வயதுடைய ஒனேலி பஹன்யா ஆகியோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள் தலாஹேன பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், சில நாட்களில் குறித்த வர்த்தகக் கட்டடத்தின் மேல் மாடியிலுள்ள பின்பக்க அறையொன்றில் தங்கியிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சடலங்கள் மீதான திடீர் மரண விசாரணையின் பின்னர், சடலங்களைத் திறக்க முடியாதவாறு (சீல் வைத்து) உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
சடலங்கள் மீதான இறுதிக்கிரியைகள் இன்று (21) தலாஹேன பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.