கண்டி நகர அபிவிருத்தி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ‘கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்’ கீழ் 1500 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கான விசேட வேலைத் திட்டமாக உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் வசதிகளை மேம்படுத்த ரூ. 1,000 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (29.11.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, நாம் 2024 ஆம் ஆண்டு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதுவரை நிறைவுசெய்யப்படாத விடயங்களை நிறைவுசெய்யவும் அதேபோன்று, 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 34,000 மில்லியன்களுக்கும் அதிகமான தொகையில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து எதிர்வரும் வருட இறுதிக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்யவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
குறிப்பாக வடக்கு, வடகிழக்கு, ஊவா, மற்றும் வடமத்திய மாகாணங்களில் மேலும் சுமார் 7,000 மில்லியன்கள் செலவில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும், முன்பள்ளி முதல் பாடசாலைகள் வரை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இதுபோன்ற அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மேலும் சுமார் 600 மில்லியன்கள் செலவில் உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
தற்போது எமது நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதால் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றாக சுமார் 1,000 மில்லியன்களை ஜனாதிபதி ஒதுக்கியுள்ளார்.
அந்த நிதியுடன் சேர்த்து உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் 1500 மில்லியன்கள் செலவில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.