இலாபத்தை எதிர்ப்பார்த்து அமைச்சரவையில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள்! மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் அங்கீகாரம் இன்றி அரச அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளதுடன், தமது தனிப்பட்ட இலாபத்தை எதிர்பார்த்து கட்சியின் பதவிக்கு மாறாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றமைக்கு வருத்தம் தெரிவிப்பதாக அதன் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமையும் பட்சத்தில் மாத்திரமே அரசாங்கத்தின் பதவிகளை ஏற்று ஆதரவு வழங்குவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அதற்கு அகில இலங்கை குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பல உறுப்பினர்களை இராஜாங்க அமைச்சர்களாக நியமிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே மைத்திரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எவ்வித உடன்பாடும் இன்றி தன்னிச்சையாக எம்.பி.க்களுக்கு பதவிகளை வழங்குவது நாம் முன்வைத்த சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் உண்மையான விருப்பம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதையே காட்டுகிறது.
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தற்போதைய அரசாங்கத்திற்கு பதவிகளை வகித்து ஆதரவளிப்பதாக பொது மக்களுக்கு பொய்யாக சுட்டிக்காட்டும் வகையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அக்கட்சி வருத்தம் தெரிவித்துள்ளது.
மத குருமார்கள், கல்விமான்கள், தொழில் வல்லுநர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் கருத்தை ஈவிரக்கமின்றி நிராகரிப்பதுடன், அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை புறக்கணிப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று, கட்சியின் அங்கீகாரம் இன்றி, தன்னிச்சையாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதால், தாய்நாட்டிற்கான கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்களின் சாதனைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.